ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
5-5-2019- ரிஷபம்.
8-5-2019- மிதுனம்.
10-5-2019- கடகம்
கிரக பாதசாரம்:
சூரியன்: பரணி- 3, 4, கிருத்திகை- 1.
செவ்வாய்: மிருகசீரிடம்- 2, 3.
புதன்: பரணி- 1, 2, 3, 4, கிருத்திகை- 1.
குரு: மூலம்- 1.
சுக்கிரன்: ரேவதி- 2, 3, 4, அஸ்வினி- 1.
சனி: பூராடம்- 2.
ராகு: புனர்பூசம்- 2.
கேது: பூராடம்- 4.
கிரக மாற்றம்:
குரு, சனி வக்ரம்.
செவ்வாய் அஸ்தமனம்.
11-5-2019- மேஷச் சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் தனது சுயசாரம். (மிருகசீரிடம்). அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 12-ல் உச்சம்! ராசியை 9-ல் ஆட்சிபெற்ற குரு பார்க்க- ராசிநாதன் செவ்வாய் 9-ல் உள்ள குருவைப் பார்ப்பது யோகம். அத்துடன் 10-க்குடைய சனியும், 9-க்குடைய குருவும் 9-ல் சேர்க்கை. தர்மகர்மாதிபதி யோகம். குடும்பச் சூழ்நிலையிலும், பொருளாதாரத்திலும் எந்தக் குறையும் இல்லை. தாராளமான வரவு- செலவும், பணப்புழக்கமும் நிறைவாக இருப்பதால், சிலருக்கு மற்றவர்கள் தயவு எதுவும் வேண்டாம் என்ற ஈகோ வளரும். குறிப்பாக, கைநிறைய சம்பாதிக்கும் கணவருக்கோ- மனைவிக்கோ சொந்தபந்தம், சுற்றம், தாய்- தந்தை, மாமன்- மாமி, உடன் பிறப்புகள் யாரோடும் ஒட்டி உறவாடும் பரந்த மனப்பான்மை உண்டாகாது. தன் குடும்பம் (தனிக்குடும்பம்) மட்டும் போதும் என்று யாரையும் லட்சியம் செய்யாமல் அலட்சியமாக இருப்பார்கள். இதற்குக் காரணம் 9-ல் உள்ள சனியும் கேதுவும்- அவரைப் பார்க்கும் ராகுவும்தான்! "தனி மரம் தோப்பாகாது' என்ற உண்மையைப் புரிந்துகொண்டால், நான்குபேரின் உதவி நமக்கு அவசியம் என்ற உணர்வு உண்டாகும். அதனால்தான் "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள். "ஊரோடு ஒத்துவாழ்' என்றும் சொன்னார்கள். தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினை தலைதூக்கும். அதை புத்திசாலித்தனமாக சமாளிக்கவேண்டும். விட்டுக்கொடுப்பவன் எப்போதும் கெட்டுப்போவதில்லை. நமக்கு வரவேண்டியதை ஆண்டவன் தடுத்தாலும் வந்துசேரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம். அவருக்கு வீடு கொடுத்த குரு 8-ல் ஆட்சி; சனி- கேது சம்பந்தம். 2020 டிசம்பர்வரை அட்டமச்சனி. எனவே கையளவு இதயத்தில் கடலளவு ஆசைகள் என்பதுபோல ஏராளமான திட்டங்களும் கற்பனைகளும் உதயமாகும். ஆனால் எதுவுமே நிறைவேறாது. எல்லாம் வேகமாக நடப்பதுபோல விறுவிறுப்பாக செயல்பட்டு, முடிவில் தாமதமாகி சோகமாகிவிடும். சிலருக்கு தோல்வியாகவும் முடியும். 2-ல் உள்ள ராகு உங்கள் வாக்கை- சொல்லை நிறைவேறச் செய்யாமல் சோதனை உண்டாக்கும். குடும்பத்திலும் எதிர்மறை நிகழ்வுகள் ஏராளமாக இருக்கும். எனவே எதையும் செய்துமுடிக்கும்வரை, யாரிடமும் வெளிப்படையாக சொல்லவேண்டாம். "சொல்வதைச் செய்வோம்- செய்வதையே சொல்வோம்' என்ற தத்துவம் உங்களுக்குப் பொருந்தாது. சொல்லாமல் செய்தால் நடந்தேறும். 4-க்குடைய சூரியனும், 2, 5-க்குடைய புதனும் 12-ல் மறைவு. சூரியன் உச்சம் என்பதால் பூமி, வீடு, நிலம் சம்பந்தப்பட்ட சுபச்செலவுகள் உண்டாகும். சிலருக்கு வாகன யோகமோ வாகன மாற்றமோ ஏற்படலாம். சிலருக்கு உடன்பிறப்புகள் வகையிலும் சுபச்செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு வகையில் தயவு தாட்சண்யம் பார்த்தால், தாட்சண்யம் தனநாசமாகிவிடும். கொடுத்துக் கெட்டபேர் எடுப்பதைவிட கொடுக்காமல் கெட்டபேர் எடுத்துவிடலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் தன் ராசிக்குப் பகை வீட்டில் இருந்தாலும், உச்சன் சூரியனோடு சம்பந்தம். அவர்களுக்கு குரு பார்வை! சூரியன், புதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 12-ல். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 10-ல் உச்சம்! எனவே தொழில்துறையில் நல்ல முன்னேற்றமும் லாபமும் அடையலாம். புதிய முயற்சிகள் கைகூடும். கூட்டுமுயற்சிகளும் வெற்றிபெறும். படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை யோகமும், வேலையில் இருப்போருக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியும், பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலர் பழைய வாகனத்தைப் பரிவர்த்தனை செய்யலாம். சிலர் குடியிருப்பு மாறலாம் அல்லது ஊர் மாறலாம். இதுசம்பந்தமாக சிலருக்கு புதுக்கடன் வாங்கும் அமைப்பும் வரும். அது சுபக்கடன்தான்- பயப்பட வேண்டாம். உடன்பிறந்தோர் அல்லது நண்பர்கள் வகையில் உதவி ஒத்தாசை எதிர் பார்க்கலாம். பொதுவாக, ஒரு கை ஓசை எழுப்பாது. பல கைகளின் ஓசை பரவசமாக்கும். 7-ல் கேது- சனி; ராகு பார்வை- எனவே திருமணத் தடை ஏற்படலாம். பெண்கள் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும்; ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் திருமணத்தடை விலகும். ஜனன ஜாதகத்தில் செவ்வாய், சனி சம்பந்தம் இருந்தால் கலப்புத்திருமணம் அல்லது காதல் திருமணம் நடக்கலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 12-ல் ராகு. 6-ல் குரு, சனி, கேது மறைவு. பொதுவாக, எந்த ஒரு ஜாதகத்திலும் எந்த கிரகங்கள் மறைந்தாலும் குரு பார்வை இருந்தால் தோஷம் விலகும். உங்கள் ராசியை குரு பார்க்கவில்லை. 10-ஆம் இடம், 12-ஆம் இடம், 2-ஆம் இடங்களுக்கு குரு பார்வை உண்டு. அதனால் உங்களுக்கு தொழில் யோகமும், தன யோகமும் இருக்கும். ஆனால், ராசியை குரு பார்க்காததால், "நாம் சம்பாதிக்கிறோம்- நமக்கு மற்ற யார் தயவும் தேவையில்லை' என்ற "ஈகோ' வளரும். 9-க்குடைய குரு 6-ல் மறைவதால், பெற்று ஆளாக்கியவர்கள், வளர்த்தவர்கள் எல்லாரையும் "டோண்ட் கேர்' என்று ஒதுக்கிவிடுவீர்கள். ஏறிவந்த ஏணியை எட்டிஉதைக்கும் குணம் உண்டாகும். அதற்கேற்றவகையில் 2-க்குடைய சூரியன் 10-ல் உச்சம். 4, 11-க்குடைய சுக்கிரன் 9-ல் உச்சம். காலம் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால் யாரும் தேவையில்லை என்ற உணர்வு மேலோங்கும். தந்தை வீட்டில் மாடியில் குடியிருந்துகொண்டு கீழே வாழும் வயதான பெற்றோரை உதாசீனப்படுத்தி, கண்டுகொள்ளாமல் நடப்பவர்களும் உண்டு. நல்லவர்களோ கெட்டவர்களோ- பெற்றவர்கள் ஆசியிருந்தால்தான் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் உண்டாகும். அதை காஞ்சி மகாப்பெரியவர் ""பெற்ற தாயைப் பட்டினி போட்டுவிட்டு ஊருக்கு அன்னதானம் செய்வது புண்ணியமாகாது'' என்று சொல்லுவார்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம்! அவருடன் 2, 11-க்குடைய புதன் சம்பந்தம்! பொருளாதாரத்திலும், தொழில்துறையிலும், வரவு- செலவுகளிலும் "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று சொல்லும்படி எல்லாம் நிறைவாக இருக்கும். 3, 10-க்குடைய சுக்கிரன் 8-ல் உச்சம். சிலருக்கு சகோதர வகையில், சிலருக்கு தொழில் வகையில் அல்லது வேலை, உத்தியோகத்தில் நிம்மதிக்குறைவும், பிரச்சினைகளும் உண்டாகும். என்றாலும் 5-ல் குரு ஆட்சி பெற்று ராசியையும், 9-ஆம் இடத்தையும் பார்ப்பதால், எப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தெய்வானு கூலத்தாலும், உங்கள் மனோபலத்தாலும் சூரியனைக்கண்ட பனிபோல விலகிவிடும்; பாதிக்காது! குருவோடு சனியும் கேதுவும், ராகு பார்வையும் இருப்பதால் மனம் மட்டும் சலனம் அடையும். அதாவது, ஊர்க்குருவி உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மரக்கிளையில் வந்து அமரும்போதும், கிளையைவிட்டுக் கிளம்பும்போதும் கொப்பு அசையும் அல்லவா! அதுமாதிரி சில அசைவுகள்! எதுவானாலும் 11-ஆம் இடத்து ராகுவும் குரு பார்வையும் "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க- என் காலம் வெல்லும்- வென்ற பின்னே வாங்கடா வாங்க' என்று சிவாஜிகணேசன் பாடிய மாதிரி, உங்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தும்! அதேபோல 9-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் என்பதால், குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும்- கவலை வேண்டாம்!
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 8-ல் மறைவு. 12-க்குடைய சூரியனும் 12-ல் மறைவு- உச்சம்! இவர்களுக்கு 4, 7-க்குடைய குரு பார்வை. குரு பார்வை நல்லது என்றாலும், குரு, சனி, கேது, ராகு சம்பந்தம் பெற்றுப் பார்ப்பதால், "அவன் கெடக்கிறான் குடிகாரன்- எனக்கு ரெண்டு மொந்தை ஊத்து' என்று சொல்லும் நிலைதான்! அரசியலில் கூட்டணிக் கட்சிகள் இணைவதுண்டு. நல்லவர் கூட்டணி என்று ஒன்று உண்டு. ஊழல்வாதிகள் கூட்டணி என்று ஒன்று உண்டு. ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் யோகமாக இருந்தால், இந்தக் கூட்டணி நல்லவர் கூட்டணி- வல்லவர் கூட்டணி- வெற்றிக் கூட்டணியாக அமையும். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் ஊழல்வாதி கூட்டணி அல்லது குற்றவாளிக் கூட்டணியாக அமைந்து விடும். சிலசமயம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து செலவுசெய்து கெட்டவர்கள் வெற்றி பெற்றுவிடுவதுபோல 2, 9-க்குடைய சுக்கிரன் 7-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பதால் முறையற்ற வெற்றி யாகிவிடும்! "ஈட்டி எட்டிய மட்டும் பாயும்- பணம் பாதாளம்வரை பாயும்' என்பது போல சில காரியங்களை பணபலத்தாலும் சாதிக்க வேண்டும். ஒன்று பணபலம் வேண்டும் அல்லது படைபலம் வேண்டும். இரண்டும் இல்லாதோருக்கு தெய்வ பலம் வேண்டும். சிலசமயம் தெய்வபலம் வேண்டி கோவிலுக் குப்போனாலும் நடைசாற்றியிருக்கும் அல்லது திரைபோட்டிருக்கும். இதுதான் நேரம் காலம் என்பது! கிரகத்திலிருந்து தப்பியோட நினைத்தாலும், நமக்கு முன்னால் அங்கும்போய் அந்த கிரகம் நிற்குமாம். இதைத்தான் "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப்போனால் அங்கே ரெண்டு கொடுமை ஆடிக்கொண்டிருக்கிறது' என்பார்கள்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் உச்சம். 6-ஆம் இடம் என்பது சத்ரு ஸ்தானம், ரோகம், ருணம், கடன் ஸ்தானம். அங்கு சுக்கிரன் உச்சம் என்பதால் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை எல்லாம் உங்களைத் தேடாமல் தேடிவந்து வாடாமல் வதைக்கும். இதைத்தான் வம்பை விலைகொடுத்து வாங்குவது என்பார்கள்! வாரக் கடைசியில் (11-ஆம் தேதி) 6-ல் இருக்கும் சுக்கிரன் 7-ல்- மேஷ ராசிக்கு மாறுவார். சூரியன், புதனோடு சேர்ந்து குரு பார்வையைப் பெறுவார். அப்போது உங்களைச் சுற்றிச்சுற்றி வந்து பற்றிக்கொண்டிருந்த எதிர்மறை விளைவுகள் எல்லாம் விலகியோடிவிடும். உடன்மறை யாகி பலன் தரும்! சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதுமேல் என்று, எதிரிகளும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். அந்த நிலையில் நீங்களும் நடந்துபோன பகையைக் கடந்து "மறப்போம் மன்னிப்போம்' என்று சமாதானம் ஆகத்தான் வேண்டும். "யாதும் ஊரே- யாவரும் கேளிர்' (கேளிர் என்றால் நண்பர்கள்) என்ற தமிழ்ப்புலவரின் வார்த் தைக்கு முக்கியத்துவம் தரலாம். 7-ல் சூரியன், புதன் சம்பந்தம்- திருமணமாகாதவர் களுக்குத் திருமணம் கூடும். பிரிந்து வாழும் தம்பதிகளும் இணைந்துவாழலாம். அதற்கு குரு பார்வையே காரணம். 7-க்கு 9-ல் குரு ஆட்சிபெற்று 7-ஆம் இடத்தைப் பார்க்க, 7-க்குடைய செவ்வாயும் குருவை 8-ஆம் பார்வை பார்க்கிறார்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 7-ல் தனது சுயசாரத்தில் (மிருகசீரிடத்தில்) நின்று தன் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனோ- லக்னநாதனோ- பாவகாதிபதியோ தன் ஸ்தானத்தைப் பார்ப்பது பலம். எனவே ஏழரைச்சனி ஒருபுறம் நடந்தாலும். உங்கள் கௌரவம், மதிப்பு, மரியாதை எதற்கும் குறை ஏற்படாது. செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்! திறமையும் பெருமையும் ஏற்படும். ராசிநாதன் செவ்வாய் 10-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதால், தொழில்துறையில் தொய்வுகள் நீங்கி உய்வு பெறலாம். போட்டி, பொறாமை களை சந்தித்தாலும், சாமர்த்தியத்தால் வெற்றிபெற்று சாதிக்கலாம். புதிய முயற்சிகள் கைகூடும். செய்யும் வேலையில் சீரும் சிறப்பும் அடையலாம். சிலருக்குப் பதவி உயர்வால் இடமாற்றமும், ஊர்மாற்றமும் ஏற்படலாம். சிலருக்கு வேலை சம்பந்தமாக வெளியூர், வெளிநாட்டு யோகம் ஏற்படலாம். இதெல்லாம் ஏழரைச்சனியில் ஏற்படும் இனிய பலன்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம். 2-ல் கேது- ராகு சம்பந்தம் இருப்பதால், குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருப்பது யோகமாக அமையும். குடும்பத்தோடு இணைந்திருந்தால், சிலசமயம் சோகமாகவும் அமையலாம். ஏழரைச்சனியின் பாதிப்பை சாதிப்பாக மாற்ற திருப்பத்தூர்வழி கண்டரமாணிக்கம் அருகில் பெரிச்சிக்கோவில் சென்று சுகந்தேஸ்வரர் கோவிலிலுள்ள ஒற்றைச் சனீஸ்வரரையும், நவபாஷாண பைரவரையும் வழிபடவும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு ஆட்சி. மூல நட்சத்திரத்தில் (கேதுவின் நட்சத்திரத்தில்) ஆட்சியோடு வக்ரம்! வக்ரமடையும் கிரகங்களுக்கு உக்ரபலம்! நல்ல இடத்தில் இருந்தால் நல்லது வலுவடையும்! கெட்ட இடத்தில் இருந்தால் கெட்டது வலுவடையும்! இங்கே ராசிநாதன் குரு பலமடைகிறார். ஆனால், சனி, கேது- ராகு சம்பந்தப்படுவதால், சில பின்னடைவுகளும் ஏற்படலாம். ஆயுள்தீர்க்கம், வசதி வாய்ப்பு ஆகியவற்றுக்குக் குறைவில்லை. பொருளாதாரத்திலும் தட்டுப்பாடு இல்லை. ஆனால் ஆரோக்கியம், உடல்நலம், மனநலம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படலாம். செவ்வாய் பார்ப்பதால், சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பீடை, சிலருக்கு தொழில், வேலையில் டென்ஷன், சிலருக்கு உடன்பிறப்புகளினால் வேதனை, சிலருக்கு பிள்ளைகளுக்கு நல்ல காரியம் தள்ளித்தள்ளிப் போவதால் கவலை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தோஷக்குறைவு, நிம்மதிக்குறைவு. நித்தியக்கண்டம் பூரண ஆயுசு என்ற நிலை! செவ்வாய்- சனி பார்வையால் சிலருக்கு யாராவது செய்வினை செய்திருப்பார்களோ என்ற சந்தேகம். குரு ஆட்சிபெறுவதால் அப்படிப்பட்ட சோதனைகளுக்கு நிச்சயம் இடமில்லை. ஆனால் திருஷ்டி தோஷம் உண்டு. "கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பமுடியாது' என்பார்கள். சிவகங்கை நாட்டரசங்கோட்டையிலுள்ள கண்ணாத் தாள்கோவில் சென்று வழிபடவும். எல்லாக் குறையும் விலகிவிடும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு- வக்ரம். அவருக்கு வீடுகொடுத்த குருவும் 12-ல் மறைவு- ஆட்சி- வக்ரம். ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றுக்குக் கேடு கெடுதியில்லை. என்றாலும், கேது- ராகு சம்பந்தம், செவ்வாய் பார்வை என்பதால், தவிர்க்கமுடியாத விரயங்கள், வீண் அலைச்சல், வெட்டிச் செலவுகள், மனச் சலனம் ஆகியவையெல்லாம் அனுபவிக்க வேண்டிய நிலை. ஆக்கிவைத்த சாப்பாட்டை சூடாக- சுவையாக- ருசியாக சாப்பிட முடியாது. மெத்தையில் படுத்தாலும்- ஏஸியில் படுத்தாலும் உரிய நேரத்தில் உறக்கம் வராமல் உருண்டுபுரண்டு கிடக்கும் அவலம்! தன்னை மறந்து கண்ணை மூடினாலும் பயங்கரமான கெட்ட கெட்ட சொப்பனங்கள்! இப்படிப்பட்ட அவஸ்தை களை ஒருபுறம் அனுபவித்தாலும், குடும்பத்திலும் அன்யோன்யம், ஆறுதல், ஆனந்தம், அமைதி இல்லாமல் அவதிப்படும் நிலை! இதெல்லாம் ஏழரைச்சனியில் விரயச்சனியின் வேலையா? அல்லது ஜாதக தசாபுக்தியின் பாதகமா என்றெல்லாம் நினைத்துநினைத்து நிம்மதியிழக்கும் நிலை. ஓரளவுக்குமேல் (கொன்றால் பாவம் தின்றால் போகும் என்று சொல்வதுபோல) மனம் பக்குவப்பட்டு, வருவது வரட்டும் சமாளிப் போம் என்று வைராக்கியமும், மனதைக் கல்லாக்கிக்கொள்ளும் நிலையும் வந்து விடும். ஆக, அஷ்டலட்சுமிகளில் எந்த லட்சுமி வந்தாலும் சரி; போனாலும் சரி- தைரியலட்சுமி மட்டும் துணையிருந் தால் போதும். எதையும் தாங்கும் இதயமாகிவிடும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம். 3, 6, 11 மூன்றும் சனி பகவானுக்கு இனிய இடங்களாகும்! அத்துடன் அவருக்கு வீடுகொடுத்த குருவும் அவருடன் சம்பந்தம்- ஆட்சி, வக்ரம்! சனியும் வக்ரம்! வக்ரத்தில் உக்ரபலம் என்பது ஜோதிட விதி! எனவே உங்கள் காரியங்களும் திட்டங்களும் செயல்களும் திட்டமிட்டபடி நிறைவேறும். கேது- ராகு சம்பந்தம் என்பதால், சில திட்டங்கள் உடனுக்குடன் தடையில் லாமல் நிறைவேறிவிடும். சில காரியங்கள் தடைப்பட்டு தாமதமாக நிறைவேறும். அதாவது ஹைவேஸ் ரோட்டில் 100 கிலோமீட்டர் வேகத்திலும் போகலாம். ஊருக்குள் சிங்கிள் ரோட்டில் வேகத் தடைகளைக் கடந்து கடந்து மெதுவாகப் போவது போலவும் சிலசமயம் அமையும். ஆனால், பயணம் பிரேக்டவுன் ஆகாது. நிற்காது! அதேசமயம் 5-ல் உள்ள ராகு மனதில் சலனத்தை ஏற்படுத்தலாம். ருசியான வடையைச் சாப்பிடும்போது அதிலுள்ள பச்சைமிளகாயின் காரம் நாவில் உறைப் பதுபோல சில நெருடல். தண்ணீரைக் குடித்து கார ருசியை சரிக்கட்டுவதுபோல தெய்வ வழிபாடு அல்லது கிரகப் பரிகாரத்தால் அவற்றை நிவர்த்திசெய்து கொள்ளலாம். 2-ல் உள்ள சுக்கிரன் உங்களுக்குப் பக்கபல மாக படைபலமும், பணபலமும் தருவதால், எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் சக்தியும், ஆற்றலும், சாமர்த்தியமும் உண்டாகிவிடும். தோல்வியே வெற்றிக்குப் போடும் அஸ்திவாரம் என்று தெளிவு பெறலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி, வக்ரம்! வாழ்க்கையிலும் சரி; தொழில்து றையிலும் சரி- "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று கூறுமளவு எல்லாம் நிறைவாக இருக்கும். அதேசமயம் சனியும் கேதுவும் ராகுவும் சம்பந்தப்படுவதால், தலைவாழையிலையில் பொன்னியரிசிச் சாதத்தைப் பரிமாறி சாம்பாரோ, ரசமோ, குழம்போ ஊற்றாமல் இருப்பதுபோல ஒருகுறை! அந்தக்குறை எந்தக்குறை யென்று சொல்லவும் முடியாது. உண்மையாகத் தெரியவும் செய்யாது. "கௌரவம்' திரைப்படத்தில், ""ஆத்தைவிட்டுப் போகணும்னு தோன்றது. எங்கே போறதுன்னு தோணலே'' என்று சிவாஜி வசனம் பேசுவதுபோல, விரக்தியும் வேதனையும் ஆட்டிப்படைக் கிறது. மாற்றுவழி என்னவென்று தீர்க்க மாகத் தெரியவில்லை. தோப்புக்கு மத்தி யிலுள்ள ஒருமரத்துக்கு மட்டும் தண்ணீர் பாய்ச்சாமல், மற்ற மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதுபோல- "பிள்ளைக்கு தந்தை ஒருவன்- நம் எல்லாருக்கும் தந்தை இறைவன்' என்றாலும், அந்த இறைவனே உங்களை மட்டும் கைவிட்டுவிட்ட மாதிரி, சுற்றியுள்ள சம்பவங்கள் நடக் கின்றன. சோதனையும் வேதனையுமாக இருக்கிறது. யாரும் இல்லாத அனாதை போல, ஆதரிப்பாரற்ற நிலையில் அல்லல் படுவதாக உணர்வீர்கள். எதிர்காலத்தை எப்படிக் கடப்பது என்பதும் தெரிய வில்லை. எப்படிச் செயல்படுவது என்பதும் புரியவில்லை. "உன்னைச் சொல்லிக் குற்ற மில்லை- என்னைச் சொல்லிக் குற்றமில்லை, காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி' என்றுதான் பாடி ஆறுதல் அடைய வேண்டும்.